Friday, July 27, 2012

நோன்பின் மாண்புகள் - 1

நோன்பின் மாண்புகள்
[இக்கட்டுரை தமிழ்மாமணி அல்ஹாஜ்
புலவர் அஹ்மது பஷீர், எம்.ஏ., எம். எட்.,
அவர்களது 1997ஆம் ஆண்டு நாட்குறிப்புப்
புத்தகத்தில் எழுதி வைத்திருந்தது]


நோன்பு ஒரு கேடயம். அதனை உடைக்காமலிருக்கும் வரை. அளிக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன் அறிவிப்பவ்ர் அபூ உபைதா (ரலி) ஹதீஸ்


நோன்பினுள் பலவிதமான நோக்கங்களும் பலன்களும் உள்ளன.  மார்க்கம் நோன்பை விதியாக்கி இருப்பதில் பல வித பலன்கள் கிடைக்க வேண்டுமென்பதே நோக்கம்.  அவற்றில் மிகப் பெரிய பலனாகிய மனோ இச்சையை முறியடித்தல் என்பது சிறிது நேரம் பசித்திருப்பதில் தான் அமைக்கப் பட்டிருக்கிறது.

ஷைத்தான் மனிதனின் உடலில் இரத்தம் போன்று ஊடுருவிச் சென்று கொண்டிருக்கின்றான்.  அவனுடைய வழிகளைப் பசித்திருப்பதன் மூலம் தடை செய்யுங்கள், என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அருளியுள்ளார்கள்.


நோன்பு இறைவன் வேதனையிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது,  நோனபு நரக நெருப்பில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. ஒரு மனிதர் ரசூல் (ஸல்) அவர்களிடம் , யா ரசூலல்லாஹ், நோன்பு எதனால் முறிகிறது? என்று கேட்டார்.  பொய் பேசுவதனாலும், புறம் பேசுவதனாலும், என்று பதிலளித்தார்கள். சாப்பிடுவதும், குடிப்பதும் நோன்பை முறிப்பது போல பொய் பேசுவதும், புறம் பேசுவதும் நோன்பை முறித்து விடுகின்றன என்று உலமாக்கள் கூறி உள்ளனர்.  சிலர் நோன்பு முறியாது, அதன் பரக்கத் நீங்கி விடும் என்றும் கூறியுள்ளனர்.

புறம்பேசுவது என்றால் என்ன? என்பதாக ஒரு மனிதர் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களிடம் கேட்டார்.  ஒருவருக்குப் பின்னால் அவருக்கு மனப்பொருத்தம் இல்லாத விஷயங்களைக் கூறுவது என்று அவர்கள் பதில் அளித்தார்கள்.  உண்மையிலேயே அவவ்விஷயம் அவரிடம் இருந்தாலுமா? என அவர் மீண்டும் கேட்டார்.  உண்மையிலேயே அவ்விஷயம் அவரிடம் இருக்கும் பொழுதுதான் புறம் என்பதாகும்.  அவரிடம் இல்லாத விஷயத்தைக் கூறினால் அது அவதூறு என்பதாகும் என பதில் அளித்தார்கள்.

வயிற்றை நிரப்புவது போன்று வேறு வேறு எந்தப் பாத்திரத்தை நிரப்புவதும் அல்லாஹு தஆலாவுக்கு வெறுப்பானதாக இல்லை எனவும் ரசூல் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

குடலை நிரப்புவது ஞானத்தை விட்டு (மனிதனை) காலியாக்கி விடும் என்பதை உடலை வளர்ப்பவர்கள் அறிந்திருக்கவில்லை. (மௌலானா ஷைகு ஸஅதீ (ரஹ்)
பசியின் கசப்பைக் கொஞ்சம் உணரவேண்டும்.  அதுதான் அதிகமான நன்மைகள் கிடைப்பதற்கும் ஏழை, எளியோரின் மீது இரக்கம் ஏற்படுவதற்கும் காரணமாக இருக்கும். (அல்லாமா தன்தாவீ (ரஹ்)

பிஷ்ருல் ஹாஃபி (ரஹ்) என்ற பெரியாரிடம் ஒரு மனிதர் சென்றார்.  அப்பொழுது வர்கள் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். அருகில் அவர்களின் ஆடைகள் கழற்றி வைக்கப்பட்டிருந்தன.  இந்தக் குளிரில் ஆடைகளைக் கழற்றி வைத்து விட்டு ஏன் நடுங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர்கள், ஏழைகள் பலர் ஆடையின்றி இருக்கின்றனர். அவர்களின் துன்பத்தில் பங்கு கொள்ள எனக்குச் சக்தியில்லை.  எனவே, அவர்களைப் போன்றாவது நான் இருந்து அவர்களின் துன்பத்தில் பங்கு கொள்ளவே இவ்வாறு நான் இருக்கிறேன், என்று கூறினார்கள்.


சொர்க்கத்தில் ரய்யான் என்று ஒரு வாசல் உள்ளது.  நோன்பாளிகள் மட்டுமே அதில் செல்ல முடியும். அவர்கள் எங்கே என்று தேடும்.  நுழைந்ததும் மூடிக் கொள்ளும். பிறர் செல்ல இயலாது. (ஹதீஸ் கருத்து)

ஐந்து கடமைகளில் மற்றவை பிறர் அறியக் கூடியவை. நோன்பு பிறர் அறிய இயலாதது.  பிற கடமைகளுக்கு வேறு வேறு கூலிகள் உண்டு.  நோன்பிற்கு இறைவனே கூலியாக உள்ளான். (ஹதீஸ் கருத்து)

இன்ஷா அல்லாஹ் இன்னும் வரும்...