Sunday, July 28, 2013

உ‏ண‏ர்வு தேவை

முள்நகர்ந்து மணிப்பொறியில்  நேரங் காட்டும்
       உள்ளிருக்கும் சக்கரங்கள் முள்ளை ஓட்டும்
தள்ளும்பற் சக்கரங்கள் வில்லுக் கம்பி
       சரியாக ஒவ்வொன்றும் பணியைச் செய்யும்
முள்ளைப் போல் சிலர்இருப்பார் சமுதா யத்தில்
       உள்ளிருக்கும் சக்கரம்போல் உழைப்பார் பல்லோர்
தெள்ளியனே! மணிப்பொறியை இயங்கச் செய்யத்
       திருகிவிடும் சாவியென இருப்பாய் நீயே!                                1

ழில்மிகுந்த  தொடர்வண்டி இயந்திரம் போல்
       இழுக்கவரும் சமுதாயம்! இழுப்போன் நீயே!
உழைக்கின்ற சக்கரங்கள் பெட்டி கட்கீழ்
      ருண்டிடுதல் உண்மைதான்! எல்லா ருந்தாம்
பிழைக்கின்ற வழிநோக்கி உழைக்கின் றார்கள்
       பெருந்தலைவர் பின்னாலே நடக்கின் றார்கள்
இழுக்கின்ற எந்திரம்போல் இருக்கின் றாய்நீ
       சமுதாய வண்டியினை இயங்கச் செய்வாய்!                             2

இயங்குகின்ற பொறியொன்றும் இல்லை யென்றால்
       இயக்குகின்ற எந்திரத்துக் கென்ன வேலை
இயங்குதற்குப் பலபொறிகஇள் இருந்த போதும்
       இயக்குபொறி இல்லையெனில் நிலைமை என்னாம்
பயனுள்ள மணிப்பொறிக்குச் சுழற்சி தேவை
       பணியாற்ற உறுப்புகளோ அனைத்தும் வேண்டும்
நயமுள்ள சமுதாயம் படைப்ப தற்கு
       நாடுகின்ற உனக்கிந்த உணர்வு தேவை!                                  3

கடனாற்ற வந்துவிட்ட தலைவன் கீழே
       கட்டுக்குள் அடங்குகின்ற மக்கள் தேவை!
உடன்பட்டுப் போ‏‏கின்ற சிறிய முள்ளால்
       முந்துகின்ற பெரியமுள்ளும் மதியைக் காட்டும்!
தொடுத்துவரப் பெட்டிகட்குத் தளைகள் வேண்டும்
       தொட்டிழுக்கும் எஞ்ஜினுக்கு விசைமின் வேண்டும்
அடுத்தடுத்த ஊர்களெனப் பறக்கும் காலம்
       அளப்பரிய வரலாற்றைப் படைத்துக் காட்டும்!                   4     

- புலவர் அஹ்மது பஷீர்
அவர்களின் இளைஞர்களுக்கான
முன்னேறு முன்னேறு மேலே மேலே
கவிதைத் நூலின் முதல் கவிதை