Sunday, July 28, 2013

உ‏ண‏ர்வு தேவை

மு‏ள்நகர்ந்து மணிப்பொறியில்  நேரங் காட்டும்
       உள்ளிருக்கும் சக்கரங்கள் முள்ளை ஓட்டும்
தள்ளும்பற் சக்கரங்கள் வில்லுக் கம்பி
       சரியாக ஒவ்வொன்றும் பணியைச் செய்யும்
முள்ளைப் ‏போல் சில‏ர்இருப்பார் சமுதா யத்தில்
       ‏உள்ளிருக்கும் ச‏க்கர‏ம்போல் உ‏ழைப்பார் பல்லோர்
தெள்ளியனே! மணிப்பொறியை இயங்கச் செய்யத்
       திருகிவிடும் சாவியென இருப்பாய் நீயே!                                1

‏எ‏ழில்மிகுந்த  தொட‏ர்வண்டி இயந்திரம் போல்
       இழுக்கவரும் சமுதாயம்! இழுப்போன் நீயே‏!
உழைக்கின்ற சக்கரங்கள் பெட்டி கட்கீழ்
       உ‏ருண்டிடுதல் உண்மைதான்! எ‏ல்லா ருந்தாம்
பிழைக்கின்ற வழிநோக்கி உழை‏க்கின் றார்கள்
       பெருந்தலைவ‏ர் பின்னாலே நடக்கின் றார்கள்
இழு‏க்கின்ற எந்திரம்போல் இ‏ருக்கின் றாய்நீ
       சமுதாய வண்டியினை இயங்கச் செய்வா‏ய்!                             2

‏இயங்குகின்ற பொறியொன்றும் இல்லை யென்றால்
       இயக்குகின்ற எந்திரத்துக் கென்ன வேலை
இயங்குதற்குப் பலபொறிகஇள் இருந்த ‏போதும்
       இயக்குபொறி இல்லையெனில் நிலைமை என்னாம்
பயனுள்ள மணிப்பொறிக்குச் சுழற்சி தேவை
       பணியாற்ற உறுப்புகளோ அனைத்தும் வேண்டும்
நயமுள்ள சமுதாயம் படைப்ப தற்கு
       நாடுகின்ற உன‏க்கிந்த உணர்வு தேவை!                                  3

கடனாற்ற வந்துவிட்ட தலைவன் கீழே
       கட்டுக்குள் அடங்கு‏கின்ற மக்கள் தேவை!
உடன்பட்டுப் போ‏‏கின்ற சிறிய முள்ளால்
       முந்துகின்ற பெரியமுள்ளு‏ம் மதியைக் காட்‏டும்!
‏தொடுத்துவரப் பெட்டிகட்குத் தளைகள் வேண்டும்
       தொட்டிழுக்கும் எஞ்ஜினுக்கு விசைமின் வேண்டும்
அடுத்தடுத்த ஊர்களெனப் பறக்கும் காலம்
       ‏அளப்பரிய வரலாற்றைப் படைத்துக் காட்டும்!                   4     

- புலவர் அஹ்மது பஷீர்
அவர்களின் இளைஞர்களுக்கான
முன்னேறு முன்னேறு மேலே மேலே
கவிதைத் நூலின் முதல் கவிதை