Monday, October 24, 2011

தமிழ்மாமணி அல்ஹாஜ் புலவர் அ. அஹ்மது பஷீர் எம்.ஏ., எம்.எட்.,

தமிழ்மாமணி அல்ஹாஜ் புலவர் அ. அஹ்மது பஷீர் எம்.ஏ., எம்.எட்.,
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 1939 ஆம் ஆண்டு பிறந்த புலவர் பஷீர் அவர்களின் தந்தையார் அபுல்பரக்காத் அவர்கள் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். மோமீன்ய்யாலிம்சா என அழைக்கப் பெற்ற அவர்களது பாட்டனார் முஹம்மது முஹ்யித்தீன் ஆலிம் சாஹிபு அவர்கள் தேவ்பந்த் தாருல் உலூமில் பயின்றவர்கள். அதிராம்பட்டினம் உஸ்வத்துர் ரஸூல் மத்ரஸா நிஸ்வானைத் தொடங்கிய மௌலானா அல்ஹாஜ் அப்துஷ் ஷுக்கூர் ஆலிம் அவர்களது உடன் பிறந்த தமக்கையார் அஸ்மா உம்மா அவர்கள் புலவர் அஹ்மது பஷீர் அவர்களின் தாயார்.

மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் வித்வான் பட்டம் பெற்ற புலவர் அஹ்மது பஷீர் அவர்கள் 1967 முதல் 1997ம் ஆண்டு காலம் சென்னை திருவல்லிக்கேணி, கெல்லட் மேனிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார்கள்.

அப்போது அவர்கள் வசித்து வந்த திருவல்லிக்கேணி லெப்பை ஜமாஅத் பள்ளியில் இமாமாகவும், சென்னை-செங்கற்பட்டு ஜமாஅத்துல் உலமா தலைவராகவும் பணியாற்றிக் கொண்டிருந்த மர்ஹூம் எம்.எஸ். அப்துர் ரஹீம் மன்பஈ, நண்பர்கள் அல்ஹாஜ் இரங்கூன் சுலைமான், அல்ஹாஜ் சிக்கந்தர், அல்ஹாஜ் இப்ராஹீம்ஷா மற்றும் பலருடன் இணைந்து இஸ்லாமியப் பண்பாட்டு இயக்கத்தைத் தோற்றுவித்ததார்கள். அதன் மூலம் திருவல்லிக்கேணி லெப்பை ஜமாஅத் பள்ளியில் குழந்தைகளுக்கான குர்ஆன் மத்ரஸா தொடங்கப் பெற்றது. மாதந்தோறும் மார்க்க அறிஞர்களைக் கொண்டு ஒவ்வொரு தெருவிலும் மாதர்களுக்காகச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப் பெற்றன.

அக்காலத்தில் குழந்தைகளுக்கென அவர்களது வயதுக்கேற்ற பாடங்களை அளிக்கும் இஸ்லாமியப் பாடநூல்களும், அரபி பாடநூல்களும் இல்லாதிருந்த சூழலில், 1979ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் குழந்தைகளுக்கென புதுமலர்கள் இஸ்லாமியப் பாடநூல்கள், புதுமலர்கள் அரபி எழுத்துப் பயிற்சி, புஸ்தானுல் அத்ஃபால் அரபி பாடநூல்கள் ஆகியவற்றை உருவாக்கி வெளியிட்டு வந்தார்கள். இப்புத்தகங்கள் தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மற்றும் தமிழ் முஸ்லிம்கள் மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்கள், மக்தபுகள், மத்ரஸாக்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

குழந்தை இலக்கியம், இஸ்லாமியக் குழந்தை இலக்கியம், உமறுப்புலவர் கவித்திறன் போன்ற இலக்கிய ஆராய்ச்சி நூல்கள், படி, முன்னேறு முன்னேறு மேலே மேலே, சிரி குழந்தாய் சிரி, சிரிக்கும் பூக்கள், அறங்காவலர் (நபி வழி நடந்த நல்லோர்) போன்ற குழந்தைகளுக்கான இஸ்லாமிய, பொது அறிவு நூல்களை எழுதியுள்ளார்கள்.

தமது சிங்கைப் பதிப்பகத்தின் மூலம் அன்பு எனும் தத்துவம் இஸ்லாம், ஃபிக்ஹு மாலை, மதீனக் கலம்பகம் போன்ற இஸ்லாமிய இலக்கிய நூல்களையும், அல்ஹிஸ்புல் அஃழம், மன்ஜில், அன்றாட அமல்கள், ஜும்ஆ நாளின் அமல்கள் போன்ற மார்க்க நூல்களையும் வெளியிட்டுள்ளார்கள்.


1990 முதல் அல்இஸ்லாம் என்ற மாத இதழையும் நடத்தி வந்தார்கள். முஸ்லிம் முரசு, சமரசம், மணிச்சுடர், மனாருல் ஹுதா போன்ற பத்திரிகைகளில் அன்னாரது கட்டுரைகள், கவிதைகள் பல வெளிவந்துள்ளன.

புலவர் அஹ்மது பஷீர் அவர்கள், அவர்களது மகளார் இராபியா ஷர்ஃபுத்தீன் அவர்களைத் தமிழகத்தின் முதல் எம்.ஏ. அரபி பட்டம் பெற்ற பெண்ணாக உருவாக்கினார்கள். அவர்களது மகனார் அஃப்ளலுல் உலமா, அஹ்மது ஆரிஃப், எம்.காம். எம்.ஃபில், அவர்களின் மூலம் நவீன அரபி மொழி, அரபி தட்டச்சுப் பயிற்சி, அரபி கம்ப்யூட்டர் பயிற்சி, அரபி மொழிபெயர்ப்புப் பயிற்சி ஆகியவற்றை அளிக்கும் அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் நிறுவனத்தை 1992இல் உருவாக்கினார்கள். தமது மகளார் அனீஸ் ஃபாத்திமா, எம். ஏ., பி.எட்., அவர்களை ஒரு ஆங்கில மொழி வல்லநராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், ஆசிரியையாகவும் உருவாக்கினார்கள்.  

1997இல் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், அவர்கள் வசித்து வந்த சென்னை சாதிக்பாஷா நகரில் முஸ்லிம் குழந்தைகள் பயில்வதற்கென்று தீனிய்யாத் கல்வியுடன் கூடிய ஓரு தனிப் பள்ளி வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்த புலவர் அஹ்மது பஷீர் அவர்கள், சாதிக் பாஷா நகர் பள்ளிவாயில் ஜமாஅத்தினரின் ஒத்துழைப்புடன் நூருல் ஹிக்மா நர்ஸரி மற்றும் தொடக்கப் பள்ளியினை 2006ஆம் ஆண்டு தொடங்கினார்கள். அப்பள்ளியின் சிறப்புத் தாளாளராக தமது இறுதிக்காலம் வரை பள்ளிக் குழந்தைகளுக்கான கல்விப் பணிகளிலேயே தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட புலவர் பஷீர் அவர்களை, பள்ளிக் குழந்தைகள், ஆசிரியர்கள், அலுவலவர்கள், முஹல்லாவாசிகள் அனைவரும் அவர்களை அப்பா, அப்பா என்றே அன்புடன் அழைத்து வந்தனர்.

புலவர் அஹ்மது பஷீர் அவர்கள் கடந்த 26/9/2011 அன்று தாருல் ஃபனாவாகிய இவ்வுலகை விட்டு தாருல் பகாவாகிய மறுமைப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். அவர்களது நல்அமல்களைப் பொருந்தி, பிழைகளை மன்னித்து, இம்மை, மறுமை வாழ்க்கையை வல்ல அல்லாஹ் வெற்றியாக்கித் தருவானாக. ஆமீன்.