Saturday, August 10, 2013

இறைத்தூதர்கள் என்போர் யார்?

இறைவனுடைய செய்திகளை மக்களுக்கு அறிவித்தவர்கள் நபிமார்கள். 

அச்செய்திகள் வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வழியாக, அல்லது நபிமார்களின் இதயத்தில் எழும் உதிப்பாக, அல்லது கனவின் மூலமாக அருளப் பெற்றன. மக்களை நல்வழி நடத்தவும், அல்வழிவிட்டு அகற்றவும் நபிமார்கள் தோன்றினர்.

இறை தூதர்களில் ரஸூல், நபி,  உலுல்அஸ்ம், ஃகாத்தம் என்னும் நான்கு தகுதிகள் - படிநிலைகள் உள்ளன.

இறைதூதர்கள் அனைவரும் நபிமார்கள் ஆவர். அவர்களின் எண்ணிக்கை 124000 என்று அறிவிக்கப் பெற்றுள்ளது. அவர்களில் வேதம் அல்லது வேதக் கட்டளைகள் கொடுக்கப்பட்டவர்கள் ரஸூல்மார்கள் எனப்பட்டனர். அவர்களுக்கெனத் தனி சட்டங்கள், வழிமுறைகள் இருந்தன. அவர்களின் எண்ணிக்கை 313. ரஸூல்களைப் பின்பற்றியவர்கள் நபியாவர். ஒரு ரஸூலின் பின் வேறு ஒரு ரஸூல் தோன்றினால்- அவருக்கெனப் புதிய சட்டங்கள் அல்லது வஷீ முறைகள் தோன்றிவிட்டால் முந்தைய ரஸூலின் ஷரீஅத் வழிமுறை முடிவுக்கு வந்துவிடும். புதிதாகத் தோன்றிய ரஸூலின் வழிமுறைகளையே பின்வரக் கூடியவர் அனைவரும் பின்பற்ற வேண்டும். 

இறைத் தூதர்களில் இறைவனுக்காகவே இறைவழியில் போராடித் தம் வாழ்வை அர்ப்பணித்தவர் உலுல் அஸ்ம் என்னும் தகுதியைப் பெற்றவர் ஆவார்.
     
ஒரு நாட்டுக்கு, ஒரு நகருக்கு, ஒரு சிற்றூருக்கு எனப் பல வகையில் இறைத்தூதர்கள் தோன்றியுள்ளனர். ஒரு நபியின் மகனாகத் தோன்றியவரும் உண்டு. சமகாலத்தில் வாழ்ந்தவரும் உண்டு.
     
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறை தூதர்களில் இறுதித் தூதர் ஆவார்கள். அவர்கள் நபியாகவும், ரஸூல் ஆகவும், ஊலுல் அஸ்ம் என்னும் தகுதியைப் பெற்றவர்களாகவும், ”ஃகாத்தம்” என்னும் இறுதித் தூதராகவும் இருக்கிறார்கள்.

நபிமார்க வரலாற்றுச் செய்திகளையும் முன்அறிஜவிப்புகளையும் இறைவன் தன் உயரிய வேதமாகிய திருக்குர்ஆனில் ஆங்காங்கே தேவையான அளவில் அருள் செய்துள்ளான்.

”இந்த பாக்கியத்தைப் பெறுவதற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அன்றியும் அல்லாஹ் (இந்த) நல்வழியில் எங்களை நடத்தியிருக்கவில்லையானால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கவே மாட்டோம். எங்கள் ரப்பின் ரஸூல்கள் சத்திய மார்க்கத்தையே திட்டமாகக் கொண்டு வந்தார்கள்” என்று (சொர்க்கவாதிகள்) கூறுவார்கள். அப்போது இந்த சொர்க்கம் (உலகில்) நீங்கள் செய்து கொண்டிருந்த நன்மையானவற்றின் காரணமாகும்; இதன் வாரிசுகளாக நீங்கள் ஆக்கப் பட்டிருக்கிறீர்கள் என்று அவர்கள் அறிவிக்கப் படுவார்கள்”. அல்குர்ஆன்(7:43)

இறைத்தூதர்களின் தன்மைகள்:

இறையோன் தன்மைகள் சிஃபத்து மூன்றாம்
                  எவரும் அறியவே வாஜிபாகும்
குறையா அவை உண்மை உரைப்போர் எனல்
                  கொடுத்த அடைக்கலப் பொருளைப் பேணி
மறைவுறாமலே விசுவாசமாய்
                  வைக்கும் அவரெனல் கல்குகளுக்கு
அறைய அவன் சொன்ன விஷயங்களை
                  அறிவிப்பவர் எனல் ஆகமூன்றே !

பொருள்:
இறைவனின் தூதர்களுக்கு மூன்று தன்மைகள் உள்ளன.
1. எப்பொழுதும் உண்மை உரைத்தல்.
2. தம்மிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப் பெற்ற பொருள்களை உரியவரிடம்
   திரும்பக் கொடுத்தல்.
3. படைப்பினங்களுக்கு இறைவன் அறிவிக்குமாறு சொன்னவற்றை
   மறைக்காமல் அறிவித்தல்.

-இம்மூன்று தன்மைகளையும் அறிவது யாவர் மீதும் கடமையாகும். 
                              -   ஃபிக்ஹு மாலை

புலவர் அஹ்மது பஷீர்.