Sunday, August 26, 2012

தோழமையாய் உனையன்றித் துணையுண்டோ யாஅல்லாஹ்

தோழமையாய் உனையன்றித்
துணையுண்டோ யாஅல்லாஹ் 


(இக்கவிதைகள் புலவர் அஹ்மது பஷீர் அவர்களின்
மேலவனே யாஅல்லாஹ் என்ற தலைப்பில் எழுதிய
100 பாட்டுகளைக் கொண்ட கவிதைத் தொடரின்
இறுதிப் பகுதியாகும். இக்கவிதைத் தொடர் முழுமையும்
ஜூலை 2004 முதல் ஜூன் 2005 வரை
முஸ்லிம் முரசு இதழில் வெளிவந்தது.
நன்றி - முஸ்லிம் முரசு)




அருட்கொடையாய் நீயளித்தாய்
ஐந்து வகைச் செல்வங்கள்
அருட்கொடையைப் பாழடிக்க
அடியார்க்கும் ஏதுரிமை?
இருமையிலும் பயனாகி
ஈமானைக் காவலிட்டு
வரும்போதில் நற்சான்று
வழங்கிடச்செய் யாஅல்லாஹ்!

உன்னொளியைப் பாய்ச்சிட்டால்
மூர்ச்சிப்பேன் என்றோநீ
என்னெஞ்சில் மிகமெதுவாய்
உணர்வலைகள் எழுப்புகிறாய்?
மென்நடைய நன்னபியை
விண்ணகத்தில் வரவேற்றுப்
பொன்னுரைகள் புகன்றவனே
புண்ணியனே யாஅல்லாஹ்!

என்செய்வோம் எனப்பதறும்
இறுதிநிலை வருமுன்னே
உன்னுடைய கண்ணியத்தை
முன்னிறுத்தி வேண்டுகிறேன்
என்சிறுமை நோக்கிநீ
இரக்கமிகக் கொண்டாலும்
உன்பெருமை நோக்கியே
உதவிடுவாய் யாஅல்லாஹ்!

வாய்அணத்தல் மிகவாகும்
வயோதிகத்தில் முணுமுணுத்துப்
போய் என்று தொலைவானோ?"
எனஎவரும் புலம்பாமல்
தூயவனே உன்னிழலில்
தொடர்ந்தென்னைக் கரையேற்ற
நேயமுடன் உன்னிழலின்
நெருக்கந்தா யாஅல்லாஹ்!

தரையெல்லாம் கடலாக்கி
நூஹூக்குத் தெப்பமிட்டாய்
எரிதழலைக் குளிரூட்டி
இபுறாஹீம் நபிகாத்தாய்
விரிகடலைப் பிளவாக்கி
மூஸாவின் வழியமைத்தாய்
இரக்கமுடன் காத்தருள்வாய்
எனையும்நீ யாஅல்லாஹ்!

முட்டையிடும் சிறுபுறவு
ஹூஹூவென திக்ர்முழங்க
வட்டமிடும் சிலந்திஇழை
வலைபின்னித் திரையும் இட
இட்டமுடன் தவ்ர்க்குகையில்
எம்நபியைக் காத்தவனே
தட்டாமல் எனையும்கார்
தனியோனே யாஅல்லாஹ்!

முடிச்சவிழ்ந்த ஆசையெலாம்
        ஒவ்வொன்றாய்க் கைகழுவ,
வெடுக்கென்று நூலறுந்த
        பட்டம்போல் விழிசுழல,
உடனடியாய் வழியனுப்ப
        ஊர்குழும, என்நாவில்
நடுக்கமின்றிக் கலிமாவை
        நடத்தியருள் யாஅல்லாஹ்!

ஆழியலைப் பெரும்பிடியில்
அகப்பட்டோர் போல்உன்றன்
ஊழியரின் வருகையினால்
உட்கிப்போய் நிற்கையிலே
வாழுமிடம் இருந்தென்ன?
வளமைகளும் இருந்தென்ன?
தோழமையாய் உனையன்றித்
துணையுண்டோ யாஅல்லாஹ்!


பிந்தாமல் எனையடக்கப்
பிரியமுடன் வந்தவர்கள்
சந்தூக்கில் தோள்கொடுத்துச்
செந்தூக்காய்த் தூக்குகையில்
நிந்தைமொழி பகராமல்
என்னுடலை இலேசாக்கி
வந்தவரின் இறைஞ்சுதலை
வழங்கவருள் யாஅல்லாஹ்!

முளைத்தெழுந்த உயிர்க்குலங்கள்
முக்கடலாய்ச் சங்கமித்துத்
திளைத்திருந்த வாழ்வெண்ணித்
தேம்பியழும் வேளையிலே
களைத்து மயங்காமல்
கருணைநபி கைப்பற்றி
அழைத்தேக நற்கருணை
அளித்தருள்வாய் யாஅல்லாஹ்!

மடியினின்றும் கறந்திடுபால்
மறுபடியும் மடிபுகவோ?
விடியாத பொழுதுகளில்
இனியும்நான் விழித்திடவோ
படியேற்றி இறக்காத
பண்பாளா அருள்ஒளிரும்
படியேற்றி உன் நிழலில்
படியச்செய் யாஅல்லாஹ்!

எந்தவிதம் கேட்பதென
ஏதொன்றும் புரியாமல்
செந்தமிழிற் பாட்டாகச்
சிந்தையெல்லாம் கொட்டிவிட்டேன்
சொந்தமுள்ள அடியானைச்
சோதனைக்குள் ஆக்காமல்
வந்தநிலைச் சாந்தியினை
வழங்கியருள் யாஅல்லாஹ்!

No comments:

Post a Comment