Saturday, August 4, 2012

நோன்பின் சிறப்புகள்

நோன்பின் சிறப்புகள்
புலவர் பஷீர்
(இக்கட்டுரை 1992 ஆம் ஆண்டு அல்-இஸ்லாம் மாத இதழில் வெளிவந்து, பின்னர் அல்இஸ்லாம் அறிவுக் களஞ்சியம் 1992 தொகுப்பில் இடம் பெற்றது)
ஈமான் கொண்டவர்களே, உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்புகள் விதிக்கப்பட்டிருக்கின்றன, என்று நோன்பின் கடமையைப் பற்றி இறைவன் தனது திருமறையில் கூறியுள்ளான்.  பழங்கால முதலே எல்லா மார்க்கங்களும் ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட சில நாட்கள் நோன்பு நோற்பதற்குத் தம் அடியார்களுக்குப் பணித்திருந்தன.
தசையும், ஆன்மாவும் கூடிப் பிறந்த நம் உடலை வைத்தே நாம் எத்தனையோ காரியங்களை உலகில் சாதிக்க வேண்டியுள்ளது. ஆதலின், தசையையும், ஆன்மாவையும் சமமாகப் போற்றி வளர்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.   நோன்பின் அடிப்படைக் கொள்கையே இவ்விரண்டையும் சமமாகப் பாவித்துப் போற்றுவதாக உள்ளது.
உள்ளுவார்க் கெல்லாம் உள்ள விளக்களிக்கும் தெள்ளிய வேதமாகிய திருக்குர்ஆன் இந்த ரமலான் மாதத்திலேயே அருளப்பட்டது.  அவ்வேதம் முழுமையும் இம்மாதத்தில் ஓதப்பட்டு இறைவனுக்காகக் காணிக்கையாக்கப்படுகிறது.  எவரெல்லாம் இம்மாதத்தை அடைகின்றாரோ அவரெல்லாம் நோன்பு நோற்கின்றார்.  எவரேனும் நோயாளியாகவோ, பயணம் செய்பவராகவோ இருந்தால் விட்டுப்போன நோன்புகளை மற்ற நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்று முழுமைப் படுத்துகின்றார்.  இறைவன் கட்டளை மிகவும் எளிதாகவே உள்ளது.
இறைவனுக்குச் செலுத்தும் நன்றியை அளிப்பதற்குப் பசித்திருத்தல் ஒன்றே வழியன்று.  உண்மை நன்றியுடையவர்களாய் விளங்க நாம் எத்தனையோ நல்ல செயல்களைச் செய்ய வேண்டும.  இதற்காகவே நோயாளிகளுக்கும், பயணிகளுக்கும் விதி விலக்குகளும், சலுகைகளும் தரப்பட்டுள்ளன.
இறைவனின் நலனுக்காக நாம் நோன்பு நோற்கவில்லை.  நம்முடைய சொந்த நலனுக்காகேவே நோன்பு வைக்கிறோம்.
முஸ்லிம்கள் முற்றிலும் சந்திரனை அடிப்படையாக வைத்தே மாதங்களைக் கணக்கிடுகின்றனர்.  இதனால் முஸ்லிம்களின் நோன்பு மாதமாகிய ரமலான் ஓர் ஆண்டில் உள்ள எல்லாப் பருவங்களிலும் சீராக மாறி மாறி வருகிறது.  எல்லா விதப் பருவகாலங்களிலும் முறையாக மாறி மாறி வருவதால் உலக மக்கள் அனைவரும் முறையே நாம் அடைந்த இயற்கைப் பருவகாலங்களிலும் நோன்பை நோற்கின்றனர்.  நோன்புக்கான பருவங்களால் ஏற்படும் இலாப நஷ்டங்களில் யாவருக்கும் சம பங்கு கிடைக்கிறது. 
நாம் நோன்பு வைப்பதனால் இறைவனுடைய திருப் பொருத்தத்திற்கு ஆளாகிறோம்.  நோன்பு வைக்காதவர் இவ்வுலகிற் பெறும் இன்பங்களை விட் நோன்பு வைத்தவர் இறைவனிடமிருந்து பெறும் பேரின்ப வாழ்வையே பெரிதாகக் கொள்வர்.  இந்த மனப் பக்குவம் நோன்பு வைப்பதனாலேயே ஏற்படுகிறது.
நோன்புக் காலங்களில் மனிதனது உண்மையான ஆன்மா விழித்துக் கொள்கிறது.  உடலின் செழுமைக்கான உணவை ஓரளவு குறைத்தவுடன் ஆன்மாவின் ஆற்றல் மிகவும் சுறுசுறுப்புடன் பணியாற்றத் தொடங்குகிறது.
ஒவ்வொரு மனிதனிடத்தும் காணப்படும் விலங்குத் தன்மையின் அளவு குறைந்து உண்மையான மானுடத் தன்மை வெளிப்படுகிறது.
அளவிறந்து உண்பதும் உடல் இச்சை கொள்வதும் மனிதனிடத்துள்ள விலங்குத் தன்மையை அதிகப்படுத்துகின்றன.  நோன்பின் மூலம் இவ்விலங்குத் தன்மை கட்டுப்படுத்தப்படுகின்றது.  விலங்குத் தன்மையை ஊக்குவிக்கும் எல்லாத் தீமைகளையும் அகற்றும் அருமருந்தாக நோன்பு பயன்படுகின்றது.
நோன்பு நோற்பவரின் ஆன்மீக இயல்பு உள்ளொளியையும், மகிழ்ச்சியையும் அடைகின்றது.  இக்காரணங்களாலேயே நோன்பு மனிதர் மீது கடமையாக்கப் பட்டுள்ளது.
நோன்பிருப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய தலையாய செயல்கள் தீய பேச்சு, தீய சிந்தனை போன்றவற்றிலிருந்து தம்மை விலக்கிக் கொள்வதாகும். நோன்பின் பெயரால் பட்டினி கிடப்பதற்கும், நல்லுணர்வுடன் நோன்பிருப்பதற்கும் வேறுபாடு உண்டு.
தெய்வீகத் தன்மையுடன் நோன்பிருந்து இறைவனின் பேராற்றலை எண்ணியிருப்பதே உண்மையான நோன்பாகும்.
தொடர்ந்து உழைக்கும் எவருக்கும், எல்லாவற்றிற்கும் ஓய்வு இன்றியமையாதது.  இந்த ஓய்வு நம் ஜீரண உறுப்புகளுக்கும் தேவை.  லங்கணம் பரம ஓளடதம் என்பர் முன்னோர்.  இன்றைய மருத்துவ நூல் வல்லாரும் இம்முடிவையே கூறுவர். 
பசித்திருத்தலும், தாகத்தை அடக்கியிருத்தலும் வயிற்றிலுள்ள சுரப்பிகளிலிருந்து சுரக்கும் கொடிய அமிலங்களைச் சுரக்காது செய்கின்றன.  ஒவ்வொர் ஆண்டிலும் நோன்பு நோற்பவர் பல்வேறு உடற்பிணிகளிலிருந்தும் தம்மைத் தற்காத்துக் கொள்கிறார்.  நோன்பு நோற்பதால் இத்தகைய வெளிப்படையான அனுகூலங்கள் இருந்தாலும் முஸ்லிம்கள் இவற்றைக் கருதி நோன்பு வைப்பதில்லை.
முஸ்லிம்கள் இறைவனின் ஆணையின்படி இறைவனுக்காக அதனை ஒரு வழிபாடாகக் கருதியே நோன்பு வைக்கின்றனர்.  இதன் மூலம் இறையச்சம், இறை நம்பிக்கை, ஆன்மீக வழிப்பாடு முதலிய யாவும் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒருங்கே வாய்க்கின்றன. 
இன்னமல் அஃமாலு பின்னிய்யாத்தி செயல்கள் எல்லாம் எண்ணங்களின் அடிப்படையாகவே தோன்றுகின்றன.  ஒவ்வொரு செயலைச் செய்வதற்கு முன்பும் நிய்யத் என்னும் எண்ணத்தை முன்னிறுத்தியே அச்செயல்களைத் தொடங்க வேண்டும் என்பது இஸ்லாமியக் கட்டளை.
நோன்பு நோற்பதின் முதற்பகுதியும் நிய்யத் என்னும் எண்ணமாகும்.  கதிரவன் தோன்றுவதற்கு ஒரு மணி முப்பது நிமிடங்களுக்கு முன்பிருந்து கதிரவன் மறையும் வரை உண்ணல், அருந்தல், உடலுறவு கொள்ளல் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும்.  இந்நோன்பு இறைவனுக்காக இறைவன் கட்டளைப் படி நிறைவேற்றப்படுகிறது என்ற மனப்பூர்வமான நம்பிக்கை வேண்டும்.  மலையில் நோன்பு திறக்கும் போது இறைவா, உனக்காக நோன்பு வைத்தேன்.  உன்னிடம் நம்பிக்கை வைக்கிறேன்.  நீ அளித்த உணவைக் கொண்டு இன்றைய நோன்பைத் திறக்கிறேன்.  என்னைப் படைத்துப் காத்துக்ப் பரிபக்குவப்படுத்துபவனே, எனது நோன்பை ஏற்றுக் கொள்வாயாக, என்று பிரார்த்தனை புரிய வேண்டும்.
நோன்பிருக்கும் காலங்களில் அன்றாட வாழ்க்கைக் கடமைகளைப் புறக்கணிக்கவோ, தள்ளி வைக்கவோ இஸ்லாத்தில் இடமில்லை.  இரவு முழுவதும் விழித்திருந்து வணங்கி விட்டுப் பகல் உறக்கத்தில் சோம்பிப் படுக்க வழியில்லை. 
வழக்கமாகத் தொழுவதை விட நோன்புக் காலத்தில் அதிகமாகத் தொழுகிறோம்.  வழக்கமாக தருமம் செய்வதை விட நோன்புக் காலத்தில அதிகமாகத் தருமம் செய்கிறோம்.  அவை போன்ற வழக்கமாகச் செய்யுங் கடமைகளை விட நோன்புக் காலத்தில் அதிகமான கடமைகளை நிறைவேற்ற வேண்டியவர்களாகயிருக்கிறோம்.
இயன்றவரை இந்தப் புனித ரமலான் மாதத்தில் திருக்குர்ஆன் முழுவதையும் ஒரு தடவையேனும் ஓதிப் பூர்த்தி செய்வது நோன்பிருப்பவர்களுக்கு மிகுந்த பயன் அளிக்க வல்லது.
புனித ரமலானில் நிறைவேற்றப்பபடும் சிறப்புத் தொழுகை தராவீஹ் எனப்படும்.  ஒருவர் இந்த ரமலான் மாத இரவில் விழித்து நன்மையை நாடி உறுதி பூண்டவராய்ச் சிறப்பு வணக்கங்களை நிறைவேற்றினால் அவர் முன்னர் செய்த பாவங்களை இறைவன் மன்னிப்பான், என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.
இந்தத் தராவீஹ் என்றும் இரவுத் தொழுகையை நிறைவேற்றுங்கால் ரமலானில் முதல் பத்து நாட்கள் இறைவனது அருட்கொடையாகவும், இடைப் பத்து நாட்கள் பிழை பொறுத்தலையும், இறுதிப் பத்து நாட்கள் தீய நரகை விட்டுப் பாதுகாப்புத் தேடுதலையும் இறைவனிடம் மன்றாடிக் கேட்டல் வேண்டும்.
புனித ரமலானில் மிகவும் புனிதமான இரவு லைலத்துல் கத்ர் என்னும் இரவாகும்.
நிச்சயமாக நாம் அதனை லைலத்துல் கத்ரில் இறக்கி வைத்தோம்.  அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.  அவ்விரவன்று வானவர்களும், அர்ரூஹும் அவர்களது இரட்சகனின் கட்டளைப்படி இறங்குவர். சகல காரியத்திலும் ஈடேற்றம் தரும்  அந்த இரவு கருக்கல் உதயமாகும் காலம் வரை இருக்கும், என்று லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பைத் திருக்குர்ஆன் தெளிவுறுத்துகிறது.
இந்த நாளில் செய்யும் வணக்கம் மிகவும் ஏற்றமானதாக இருக்கும்.  ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கங்களை விடச் சிறப்பானதாக இருப்பதால் நல்லடியார்கள் இவ்விரவு முழுவதும் தீவிரமாயிருந்து வணங்குகின்றனர்.  இந்த இரவு புனித ரமலானின் கடைசிப் பத்து தினங்களில் ஒற்றைப்படையான நாட்களில் சம்பவிக்கின்றது எனப் பல்வேறு அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜக்காத் என்னும் ஏழை வரியும் சதக்கத்துல் ஃபித்ர் என்னும் தான தர்மமும் இந்நோன்புக் காலத்திலேயே நிறைவேற்றப்படுகின்றன.
உங்கள் செல்வத்தை ஜக்காத் என்னும் ஏழைவரி கொடுப்பதன் மூலம் காத்துக் கொள்க.  சதக்கா என்னும் தான தார்மம் மூலம் நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்யுங்கள். பணிவுடன் பிரார்த்தனை புரிவதன் மூலம் இன்னலையும், இழப்பையும் நீக்கிக் கொள்க, என்று எம்பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயம்பியுள்ளார்கள்.
வெள்ளி, தங்கம், ரொக்கப் பணம், தானியம், பழவர்க்கம், வியாபாரச் சரக்குகள், ஆடு, மாடு, ஒட்டகம் முதலான யாவற்றுக்கும் ஜக்காத் என்னும் ஏழை வரி கொடுத்தல் வேண்டும்.  நூற்றுக்கு இரண்டரை விழுக்காடு முதல் செலுத்தப்படும் இந்த ஏழை வரி ஏற்றத் தாழ்வற்ற சமுதாய அமைப்பு உருவாக மிகவும் உறுதுணை செய்யும்.
ஃபித்ரா என்பது தன்னைப் பேணிக் கொள்ளும் வசதியுள்ள முஸ்லிம் ஒவ்வொருவரும், தனக்கும் தன் பாதுகாவலில் உள்ளவர்க்குமாக நபர் ஒன்றுக்கு ஒரு மரக்கால் தானியம் தர்மாகக் கொடுப்பதாகும்.  இந்த தர்மங்கள் ரமலான் மாத ஆரம்பம் தொடங்கிப் பெருநாள் தொழுகைக்கு முன்னர் கொடுக்கப்பட வேண்டும்.  பொருளற்றவரும் பெருநாளை மகிழ்ச்சியுடன் சரிசமமாகக் கொண்டாட இந்த தானதர்மங்கள் வழிவகுக்கின்றன.
புனித ரமலானுக்குப் பிறகு வரும் நாள் நோன்புப் பெருநாள் ஆகும்.  இப்பெருநாளிலும் இறைவணக்கமே இன்றி யமையாதாய்க் காணப்படுகின்றது.
புனித ரமலான் முழுவதும் நோன்பு நோற்ற பிறகு கொண்டாடப்படுவது இப்பெருநாள்.  முழுமையும் ஒரு மாதக் காலம் பகற்பொழுதில் உண்ணல், பருகல் போன்றவற்றை நீத்தவர்க்கு இத்திருநாளன்றுதான் பகற்பொழுதில் உண்ணல், பருகல் போன்ற செயல்களைச் செய்ய அனுமதி கிடைக்கின்றது.  இஃது ஒரு வகையில் இறைவன் அளித்துள்ள அருட்கொடகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது.  சோதனைக்குப் பின்னர் வரும் வெற்றியைப் போலவும், பொறுமைக்குக் கிடைத்த பெரும் பரிசில் போலவும், இந்தப் புனிதப் பெருநாள் காட்சியளிக்கின்றது.  ஈதுல் ஃபித்ர்’- ஈகைத் திருநாள் எனப்படும் இப்புனிதப் பெருநாளை முஸ்லிம்கள் புத்தாடையணிந்தும், புதுவகை உணவு அருந்தியும், ஏழைகளுக்கு அருத்தியும் இனிதே கொண்டாடுகின்றனர்.

No comments:

Post a Comment